இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது.


அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.


அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.


தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.


ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ரொக்கெட், நாளை(ஜூலை 14) பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.


இதற்கான, 25 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான, ‘கவுன்ட் டவுண்’ இன்று மதியம், 1:00 மணிக்கு தொடங்குகிறது.


பூமியில் இருந்து புறப்படும் ரொக்கெட், 173 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து படிப்படியாக புவி வட்ட பாதையின் துாரம், 36,500 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்.


பின், ரொக்கெட்டில் உள்ள, ‘புரோபெல்லன்ட்’ சாதனம் ரொக்கெட் போல் செயல்பட்டு, சந்திராயன் விண்கலத்தை, நிலவின் சுற்று வட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்கும். ஆக., 23 அல்லது, 24ம் திகதி சந்திரயான் விண்கலம் – 3ல் உள்ள லேண்டர் கலனை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.