சாணக்கியனை அரசிலுக்குள் இழுத்துவந்தவர்கள், அவரை தமிழ் தேசியவாதியென்று நம்புபவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என மட்;டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மட்டக்களளப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் கடந்த 16வருடங்களுக்கு மேல் உடைந்து புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கற்சேனை விநாயகர் அணைக்கட்டின் மீள்நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.


காலநிலை மாற்றத்தினை எதிர்நோக்குவதற்கான பன்முகப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியினால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட சுமார் 12மில்லியன் ரூபா செலவில் இந்த அணைக்கட்டு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ளது.


இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நாகரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்;டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தற்போது சுமார் 70ஏக்கருக்கு மேல் குறித்த அணைக்கட்டின் ஊடாக விவசாய செய்கைகள்முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த அணைக்கட்டு புனரமைக்கப்படுவதன் ஊடாக 120 ஏக்கருக்கு மேல் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.


குறித்த அணைக்கட்டினை புனரமைத்துதருதாறு கடந்த 16வருடங்களாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில் இன்று அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


இங்கு உரையாற்றும்போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மேலும் தெரிவிக்கையில்,


அண்மையில் விவசாய இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு வருகைதந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைப்புகளின் வேண்டுகோள்,பொறியியலாளர்களின் கணிப்பீடுகளின் அடிப்படையில் 530மில்லியன் ரூபாவில் 22வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.அதில் இந்த விநாயகர் அணைக்கட்டு பெரிய வேலைத்திட்டமாக அடையாளம் காணப்பட்டிருந்தது.அதன் கீழ் இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.


கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தொடங்கியுள்ளோம்.சுமார் நான்கு பில்லியன் அளவிலான வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள.எதிர்காலத்தில் சுமார் 15பில்லியன் அளவிலான வேலைகளை செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.


இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.அதிலும் சாணக்கியன் அவர்கள்தான் அதிகளவான விமர்சனங்களை முன்னெடுத்துவருகின்றார்.அவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் 2030 என குறிப்பிட்டதில் உள்ளவற்றை அவரிடம் எங்குள்ளது என கேட்கவேண்டும்.


கவலையான விடயம் என்னவென்றால் அவருடைய தாய் இனத்தவருடன் இணைந்து எங்களது வீடுகளையும் அவர் எரிக்கவந்தார்.கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சகோதர இன மாணவர்களுடன் இணைந்து எங்களது காரியாலயத்தினையும் எரிக்கமுனைந்தார்.


அரசாங்கம் மாறவேண்டும்,நாட்டில் மாற்றம்வேண்டும் என்று போராடியபோது சாணக்கியன் மாத்திரம் அவரது அரசியல் எதிரிகளான வியாழேந்திரன்,பிள்ளையான் வீடுகளை எரிக்கவேண்டும் என்றும் ஆக்களை கொண்டுவந்து கல்லெறிந்தார்.இதுதானா ஜனநாயகம் என்பதை அவர்கள்கேட்டுப்பார்க்கவேண்டும்.


சாணக்கியனும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்திருக்காவிட்டால் எமது வீட்டுக்கு கல்லு வந்திருக்காது.இவரை அரசியலுக்கு இழுத்துவந்தவர்கள்,இவரை தமிழ்தேசியவாதியென்று நம்புபவர்கள் சிந்தித்து எதிர்காலத்தில்முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.